"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது."
குறள் எண் - 647
பொருள் - தான் கருதியவற்றைத் தகுந்த முறையில் சொல்ல வன்மையுள்ளவனாகவும், சொல்லும்போது சொல்லில் சோர்வுற்ற சொல் இல்லாதவனாகவும், தகுதியுள்ளச் சொல்லைச் சொல்ல அச்சமில்லாதவனாகவும் இருக்கும் சொல்வன்மை உள்ள ஒருவனைச் சொற்போரில் (செயல்போரிலும்) வெல்வது எவராலும் முடியாது.
எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே ஏழைகள் மீது ஒரு தனி கவனம் இருந்தது. காரணம் கடவுள் எனக்கு எந்த குறையும் வைக்காததுதான். அந்த காலகட்டத்தில் எனக்குள் பல சிந்தனைகள் எழுந்தது. இதன் விளைவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தேடத்தொடங்கினேன். கடவுளைக் கண்டேன். கடவுள் மனிதர்கள் வாயிலாகத்தான் வெளிப்படுகிறார் என்பது உறுதியானது. கடவுளின் மொத்த உருவம் அன்பும், அறச்செயல்களும்தான் என்பதை உணர்ந்தேன்.
கடவுள் எங்கெல்லாம் வெளிப்படுகிறார் என்று தேடத்தொடங்கினேன். நான் கிறிஸ்தவன் என்பதால் பைபிள் வார்த்தைகளே என் மனதில் அதிகமாக பேசத் தொடங்கியது. இதன் விளைவாக 2004-ம் ஆண்டு "உன்னாலும் முடியும்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். புத்தகத்தின் கரு "நீயும் கடவுளை காணலாம், கடவுளாகலாம் என்று கூறி, இல்லாதவர்களை மாற்ற என்ன செய்யலாம்" என்பது தான்.
நான் எழுதிய புத்தகத்தின் ஒளி சரியாக உலகைச் சென்றடையவில்லை. ஆனால் நான் வெளிச்சத்திலேயே இருந்தேன். இந்த உலகம் இருளில் உள்ளது என்பதை நினைத்து வருந்தினேன். இருந்தாலும் என் மனம் தளரவில்லை. இதன் விளைவு எனக்குள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது. வந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று செய்ய தொடங்கினேன். இக்காலகட்டத்தில் ஒரு நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது. அது யாதெனில், கடவுளின் வார்த்தைகளைக் கூறி சம்பாதிப்பவர்களே அதிகமாக இருந்தார்கள். இதன் விழிப்புணர்வை எப்படி மக்களிடம் கொண்டு வர முடியும் என்று யோசித்தேன். இதன் விளைவே ஜீவ விருட்சம் என்ற அமைப்பு.
விருட்சத்தின் கரு நம் முன்னோர்கள் விதைத்த பல நல்ல சிந்தனைகளும் கருத்துக்களின் தொகுப்பே ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் சேவை மற்றும் கடவுளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். நாம் நமது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டால் நாம் அனைவர் நினைத்ததையும் சாதிக்கலாம்.
இதை படிப்பவர்கள் அனைவரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான படிவமே இது.
நான் ஒன்றை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் ஜாதி, மதம், மொழி ரீதியாக கண்டிப்பாக ஒன்று சேர வேண்டாம். நல்ல மனிதனாக மனிதநேயத்தோடு ஒன்று சேர்ந்தால் மட்டுமே போதுமானது.
நாம் அனைவரும் ஓன்று கூடும் நாளும், நேரமும் வெகு விரைவில் தெரிவிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
கனி,
P. A. Rajan
1.இரத்ததானம் செய்வது.
2.உடல் தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு தருவது.
3.பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத குழந்தைகளின் படிப்புக்கான உதவியை ஏற்படுத்தித் தருவது.
4.ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது.
5.கடவுளைப் பற்றிய விழிப்புணர்வு தருவது.
6.போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட விரும்பியும் விடுபட முடியாதவர்கள் விடுபட எண்ணினால் அதற்கான உதவியை ஏற்படுத்தித் தருவது.
1. இந்த அமைப்பு எந்த ஒரு பிரிவையும் சார்ந்து செயல்படாது. எடுத்துக்காட்டாக ஜாதி, மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி செயல்படும்.
2. இந்த அமைப்பு எக்காலத்திலும் அரசியல் சார்புடைய அமைப்பாக மாறாது.