"எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக்
கற்றுக்கொண்டுள்ளேன்;
எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்;
வளமையிலும் வாழத் தெரியும்;
வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ,
நிறைவோ குறைவோ எதிலும்
எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்;
எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு
எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு".
வணக்கம். என் பெயர் P.A.RAJAN. நான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் ஊரைச் சேர்ந்தவன். என் பள்ளி பருவத்தை நாகர்கோவிலில் முடித்தேன். என் கல்லூரி பருவத்தை கோவையில் முடித்தேன்.இதன்பின் ஒரு தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தேன். இப்போது சுயதொழில் செய்து வருகின்றேன்.
இந்த அமைப்பில் பங்கு கொள்ள வந்த தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நாம் ஓன்று பட்டால் இந்த உலகை நல்வழிப் படுத்தலாம் என்ற தன்னம்பிக்கை உள்ள எண்ணத்தில் தோன்றியதே இந்த அமைப்பு. இவ்வுலகம் மிகவும் சீர்கெட்டுப்போய் உள்ளது. இதனால் இவ்வுலகைச் சார்ந்து வாழும் நாமும் பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். உலகைச் சார்ந்து கடவுளின் வார்த்தைகளுக்கு எதிராக பல தவறுகள் செய்தேன். இப்போது கடவுளின் அருளால் பாவங்களில் இருந்து மீட்புப் பெற்று மீண்டு நல்வழியில் நடக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நான் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூற தகுதியற்றவன். ஆனால், நம் முன்னோர்கள் வகுத்த நல் வழிப் பாதையில் நடக்க விரும்புகிறேன். நாம் சேர்ந்து நடப்போமே! உலகை மாற்ற முயலுவோமே!
இந்த அமைப்பு ஒரு Non Profitable Organization. ஒரு சில சமூக சேவை நிறுவனங்கள் செய்த தவறினால் சமூக சேவை நிறுவனம் என்றாலே பணம் வசூலிக்கும் கூட்டமாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவி உள்ளது. இந்த தவறை நாங்களும் செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். பிறரிடம் நன்கொடை வாங்காமலும் ஒரு அமைப்பை இயக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறோம். சாதித்துக் காட்டுவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்."
குறள் எண் - 666
பொருள் - ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணியவர், வினையில் மனஉறுதி கொண்டவராக இருப்பின், தான் எண்ணிய அச்செயலை எண்ணிய வழியில் முடித்து வெற்றி பெறுவர்.
இவ் விருந்தில் பங்கு கொள்ளும் அனைவரும் பேறுபெற்றோர்.
1.இரத்ததானம் செய்வது.
2.உடல் தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு தருவது.
3.பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத குழந்தைகளின் படிப்புக்கான உதவியை ஏற்படுத்தித் தருவது.
4.ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது.
5.கடவுளைப் பற்றிய விழிப்புணர்வு தருவது.
6.போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட விரும்பியும் விடுபட முடியாதவர்கள் விடுபட எண்ணினால் அதற்கான உதவியை ஏற்படுத்தித் தருவது.
1. இந்த அமைப்பு எந்த ஒரு பிரிவையும் சார்ந்து செயல்படாது. எடுத்துக்காட்டாக ஜாதி, மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி செயல்படும்.
2. இந்த அமைப்பு எக்காலத்திலும் அரசியல் சார்புடைய அமைப்பாக மாறாது.